Admin
க்ரைம்

“காங்கிரஸ் நிர்வாகி செய்த சம்பவம்” - கேள்வி கேட்டதால் சரமாரியாக தாக்கப்பட்ட மரிய ராஜன்.. குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காரில் வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர்...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய ராஜன். பனவிளை பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனைகள் இருந்து வந்ததாலும், ஏற்கனவே இருந்த குடிநீர் இணைப்பு குழாய்கள் பழுதடைந்து இருந்ததாலும் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பை சரி செய்ய முடிவு செய்தனர். அதன்படி மரிய ராஜன் வீட்டின் முன் சனிக்கிழமை காலை ரீத்தாபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பதிக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உள்ளனர். .

இதற்கு மரிய ராஜன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காரில் வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் மரிய ராஜனிடம் பேசியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த எட்வின் ஜோஸ் மரியாவை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதில் காயமடைந்த மரிய ராஜனை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த மரிய ராஜன் தாக்குதல் சம்பவம் குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதற்கிடையே மரிய ராஜன் தன்னை அரசு பணி செய்ய விடாமல் தாக்கியதாக எட்வின் ஜோஸ் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இரு தரப்பும் மாறி மாறி கொடுத்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் காரில் இருந்து இறங்கி மரிய ராஜனை சரமாரியாக தாக்கி விட்டு காரில் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குடிநீர் குழாய் பதிக்க ஜேசிபி மூலம் பள்ளம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்தவரை ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் சரமாரியாக தாக்கியதும். இருவரும் மாறி மாறி புகாரளித்ததும் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பனவிளை மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் குடிநீர் குழாய்கள் அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.