க்ரைம்

"உடலில் இருந்த புழுக்களை நீக்க பிணத்தை எரித்தேன்" - ஜார்க்கண்டில் அண்ணன் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. தங்கை மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

தம்பி கூறியது இந்த மரணத்தில் இருக்கும் மர்மத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது

மாலை முரசு செய்தி குழு

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள கோவிந்த்பூர் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. லிபிகா குமாரி என்ற பெண்ணின் பாதி எரிந்த நிலையில் இருந்த பிணம், அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்ததும் அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லிபிகாவின் அண்ணன் பிரணவ் ராஜ்யவர்தன் கொடுத்த வாக்குமூலம் போலீசாரையே மிரள வைத்துள்ளது. தனது தங்கை இறந்து சில நாட்கள் ஆனதால் அவரது உடலில் புழுக்கள் மொய்க்கத் தொடங்கியதாகவும், அந்தப் புழுக்களை நீக்கவே தான் பிணத்தை எரித்ததாகவும் அவர் மிகவும் கூலாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிபிகாவின் தந்தை ஒரு முன்னாள் விஞ்ஞானி ஆவார். கடந்த 2023-ம் ஆண்டு அவர் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, லிபிகா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 7-ம் தேதி லிபிகாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவரது அண்ணன் பிரணவ் அவருக்கு முதலுதவி செய்துள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே லிபிகா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தங்கை இறந்த செய்தியைத் தனது தம்பி பிரத்யுத்திடம் உடனே சொன்னதாகப் பிரணவ் கூறுகிறார். ஆனால், பிரத்யுத் அந்த இடத்திற்கு வர நான்கு நாட்கள் ஆனதாகவும், அதற்குள் பிணம் அழுகி புழுக்கள் வரத் தொடங்கியதால் அதை எரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பிரணவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருப்பினும், இந்த வழக்கில் பிரணவ்வின் தம்பி பிரத்யுத் முற்றிலும் மாறுபட்ட தகவலைக் கூறுகிறார். தனது அக்கா இறந்த விஷயமே தனக்குத் தெரியாது என்றும், அண்ணன் தனக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். "எனது அக்காவின் உடல் பாத்ரூமில் இருந்து பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எனது அண்ணன் வீட்டில் தான் இருந்தார். எனக்கு எந்தத் தகவலும் தெரியாது, நான் அந்த உடலையும் பார்க்கவில்லை" என்று தம்பி கூறியது இந்த மரணத்தில் இருக்கும் மர்மத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. அண்ணன் தங்கை உடலைப் பார்த்ததாகச் சொல்ல, தம்பியோ பார்க்கவில்லை என்று மறுப்பது போலீசாருக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லிபிகா உண்மையில் உடல்நலக்குறைவால் தான் இறந்தாரா அல்லது அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பிரணவ்வின் வினோதமான வாக்குமூலங்கள் மற்றும் சகோதரர்களுக்கு இடையிலான முரண்பட்ட கருத்துக்கள் இந்த வழக்கைச் சிக்கலாக்கியுள்ளன. தற்போது லிபிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முடிவுகள் வந்த பிறகே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்த முழுமையான உண்மைகள் தெரியவரும் என்று தன்பாத் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு விஞ்ஞானியின் குடும்பத்தில் நடந்த இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.