க்ரைம்

“சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை” - தேவையற்ற வீடியோக்களை பார்க்க சொல்லி சித்ரவதை.. Chat GPT மூலம் வெளிவந்த உண்மை!

குழந்தைகள் நல அமைப்புகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தனக்கு தனது தந்தை மூலம் நேர்ந்த கொடுமைகள்...

Mahalakshmi Somasundaram

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே ராஜா தனது மூன்று பிள்ளைகளை தனியாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது இளைய மகளான 17 வயது சிறுமியை, அவர் 7 வயதாக இருந்த காலத்திலிருந்தே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மொபைல் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வந்த அவரது தந்தை மற்ற பிள்ளைகள் வீட்டில் இல்லாத நிலையில் பல்வேறு தவறான செயல்களைப் பார்க்கக் கட்டாயப்படுத்தி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சிறுமிக்கு சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சொந்த வீட்டிலேயே அச்சத்தில் இருந்த சிறுமி யாரிடமும் உதவி கேட்க முடியாமல் தவித்து தனது மொபைலில் இருந்த ChatGPT செயலியின் உதவியை நாடியுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து, அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, இது ஒரு கடுமையான குற்றம் என்றும், உடனடியாக உதவி கோர வேண்டும் என்றும் செயலி அறிவுறுத்தியதுடன், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறும் பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமி, குழந்தைகள் நல அமைப்புகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தனக்கு தனது தந்தை மூலம் நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நவி மும்பை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தந்தையே கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்த சிறுமி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தைரியமாக வெளியில் உதவி கோரி உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.