சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், எம்ஜிஆர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் 21 வயதுடைய ஆறுமுகம். இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும், திருபெரும்புதூர் அடுத்த எழுச்சூர் ஊராட்சி மன்ற தலைவரை சில மாதங்களுக்கு முன் கொலை செய்த வழக்கில் ஆறுமுகம் முக்கிய குற்றவாளி என்றும் கூறப்படுகிறது. ஆறுமுகத்திற்கு முடிச்சூர், லட்சுமி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய தீபக் என்பவருடன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நண்பர்களாகி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதனை சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரிடம் அதிக பணம் சம்பாதிக்கவே “அவர்களுக்குள் இருவரில் யார் கெத்து” என்ற பகை ஏற்பட்டது. இதனால் யார் பெரியவன் என்று காட்டுவதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன் ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து முடிச்சூரில் உள்ள தீபக் வீட்டிற்கு அவரை தாக்குவதற்காக சென்ற நிலையில் அங்கு தீபக் இல்லாததால் ஆத்திரத்தில் அவரது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து தீபக் குடும்பத்தினர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், ஆறுமுகத்தின் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து ஆறுமுகம் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தன்னை தாக்குவதற்கு தனது வீடு தேடி வந்த ஆறுமுகத்தை, இனி மேலும் உயிருடன் விட்டால், தான் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்த தீபக், கடந்த (மார்ச் 8) ஆம் தேதி இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோவில் தனது நண்பர்கள் படையை திரட்டிக் கொண்டு முடிச்சூர் முழுவதும் ஆறுமுகத்தை வலைவீசி தேடி இருக்கின்றனர். எங்கு தேடியும் ஆறுமுகம் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறுமுகத்தின் நண்பரான பழைய பெருங்களத்தூர், மேட்டு தெருவைச் சேர்ந்த 23 வயதுடைய ஹரி கிருஷ்ணன் என்பவரை கத்தி முனையில் ஆட்டோவில் கடத்திச் சென்றனர்.
பின்னர், யாரும் இல்லாத இடத்தில் வைத்து அவரது உடலில் சரமாரியாக வெட்டி, ஆறுமுகம் இருக்கும் இடத்தை கூறுமாறு கேட்டுக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனால் வலி பொறுக்க முடியாமல், உயிருக்கு பயந்த ஹரி கிருஷ்ணன், ஆறுமுகம் பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். அதன் பேரில் விரைந்து சென்ற தீபக் தலைமையிலான கும்பல், நள்ளிரவு வரை காத்திருந்து அனைவரும் அயர்ந்து தூங்கிய நேரத்தில், நைசாக வீட்டின் உள்ளே சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் அவரது நண்பரான முடிச்சூர், லெட்சுமி நகர், காந்தி தெருவைச் சேர்ந்த 18 வயதுடைய சதிஷ் ஆகியோரை முகத்தில் சரமாரியாக வெட்டி, கொடூரமாக முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
தப்பிச் செல்வதற்கு முன்பு அவர்கள் கொலை செய்வதை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை தங்களது ஏரியாவில் உள்ள மற்ற நண்பர்களுக்கு இனி தாங்கள் தான் ஏரியாவில் கெத்து என்று காட்டுவதற்காக அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நான்கு தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று தாம்பரம், குரோம்பேட்டை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த இவ்வழக்கில் தொடர்புடைய வரதராஜபுரம், பெரியார் நகர் 3-வது தெருவை சேர்ந்த ஸ்ரீஹரி (21), முடிச்சூர், கம்பர் தெருவை சேர்ந்த அப்பு (20), அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்குமார் (25), ஈக்காட்டுதாங்கள், அம்பாள் நகர் பங்களா 1-வது தெருவை சேர்ந்த விஜய்(20), சூர்யா(23), பழைய பெருங்களத்தூர், ராகவன் தெருவை சேர்ந்த அபினேஷ்(20), வ. உ.சி தெருவை சேர்ந்த புவனேஷ்(26) , மணலி மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த 17 வயதான சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான தீபக், கமலேஷ், பப்லு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் நண்பர்களான இளைஞர்கள் ஏரியாவில் யார் கெத்து என்று காட்டுவதற்காக மாறி மாறி மோதிக்கொண்டதில் இருவர் ஒரே நேரத்தில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்