திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்கா, பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதுடைய சண்முக பாண்டியன். இவர் தனது மனைவி சந்தியாவுடன் மதுராந்தகம் அடுத்த மொரப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் செங்கல்பட்டில் உள்ள ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் கலெக்ஷன் ஏஜன்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டை சேர்ந்த மதி என்பவருக்குக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, சண்முக பாண்டியன் அவரிடமிருந்து ₹30,000 டெபாசிட் தொகையை பெற்றதாக சொல்லப்படுகிறது.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி மதிக்கு சண்முக பாண்டியன் கடன் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கடன் குறித்து கேட்கும் போதெல்லாம் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, செங்கல்பட்டு வல்லம் அருகில் உள்ள கழணி வெளியில், மதி மற்றும் அவருடன் இருந்த பெயர் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு கூட்டாளிகள் சண்முக பாண்டியனை அழைத்துச் சென்று பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு பல மணி நேரம் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த சண்முக பாண்டியன் மயங்கி விழுந்ததால், மதி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர், மதி தனது நண்பரான ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சதீஷ் என்பவருக்கு போன் செய்து சண்முக பாண்டியன் மயங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சதீஷ், சண்முக பாண்டியனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், பாரதபுரம் அருகில் அவரது நிலைமை மோசம் அடையவே, அங்கேயே விட்டுவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் மூலம் சண்முக பாண்டியன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உயிரிழந்த சண்முக பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தப்பி சென்ற குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.