சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய ரெபேக்கா. இவர் கீழ்ப்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 6 மாதங்களாக கேஷியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 31) ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில் ரெபேக்கா வங்கியில் பணியில் இருந்தபோது, பொதுமக்கள் போல் உள்ளே நுழைந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினார். இதில் ரெபேக்காவின் தலை மற்றும் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
ரெபேக்காவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ரெபேக்காவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெபேக்காவை கத்தியால் வெட்டியது அவரது கணவரான அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஓட்டேரியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற போது சதீஷ்குமாருக்கும் ரெபேக்காவுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஸ்டெபி ரோஸ் என்ற மகள் இருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு ரெபேக்காவை சதீஷ்குமார் உயர்கல்வி படிக்க வைத்ததாகவும், பின்னர் அவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வேலைக்குச் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு ரெபேக்காவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக சதீஷ்குமார் சந்தேகித்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சதீஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி ரெபேக்காவை தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ரெபேக்கா போலீசில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மகள் தொடர்பான தகராறு
இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு முதல் கணவரை பிரிந்த ரெபேக்கா, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். எனவே 2025 ஆம் ஆண்டு விவாகரத்து கோரியும், மகளை முழுமையாக தனது பொறுப்பில் ஒப்படைக்கக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு ரெபேக்கா கேட்ட போது, சதீஷ்குமார் மறுத்ததுடன் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மகளை மீட்டுத் தரக்கோரி ரெபேக்கா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, மகளை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்கள் என அச்சமடைந்த சதீஷ்குமார், கடந்த ஆண்டு (ஜூலை 23) ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு தனது மகளை அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்கு பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவிக்கு கொலை மிரட்டல்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், ரெபேக்கா மற்றும் அவரது தங்கைக்கு இன்ஸ்டா மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக ரெபேக்கா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டேரி போலீசார் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் விடாமல் தொடர்ந்து சதீஷ் தனது மனைவி மற்றும் அவரது தங்கைக்கு நண்பர்கள் மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த காரணத்தினால் சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க ஓட்டேரி போலீசார் சென்னை மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டார். அந்த வகையில் புழல் சிறையில் உள்ள சதீஷ் மீது கடந்த ஆண்டு குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜாமீனில் வந்து கொலை முயற்சி
இந்நிலையில், கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ்குமார், ரெபேக்காவை கொலை செய்ய திட்டமிட்டு (ஜூலை 31) சனிக்கிழமை கத்தியுடன் அவர் பணியாற்றும் வங்கிக்குள் நுழைந்து தாக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொலை செய்யும் எண்ணத்துடன் வங்கிக்குள் புகுந்து பெண் ஊழியரை அவரது கணவரே கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.