

சென்னை மாவட்டம், ஓட்டேரி அடுத்த மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய ரேபிகா. இவர் அயனாவரம் ஏகாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சதீஷ் என்பவரை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஸ்டெபி என்ற மகள் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ரேபிகா தனது மகளுடன் கணவனை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த (ஜூலை 20) ஆம் தேதி 6 வயதுடைய மகள் தனது தந்தையான சதீஷை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது சதிஷ் தனது மகளை அழைத்துக்கொண்டு சென்னை மவுண்ட் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றிருக்கிறார். பின்னர் விடுதியில் வைத்து தனது ஆறு வயது மகளான ஸ்டெபியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சதீஷும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் தகவலறிந்து சதீஷை காப்பாற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியே வந்த சதீஷ் தனது மனைவி ரேபிகா மற்றும் ரேபிகாவின் தங்கை ஆகியோருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் செல்போனில் தினசரி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து ரேபிகா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டேரி போலீசார் சதீஷை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் விடாமல் தொடர்ந்து சதீஷ் தனது மனைவி மற்றும் அவரது தங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த காரணத்தினால் சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க ஓட்டேரி போலீசார் சென்னை மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று சதீஷை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர ஆணையர் நேற்று உத்தரவிட்டார். அந்த வகையில் தற்போது புழல் சிறையில் உள்ள சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.