Kodungaiyur Murder 
க்ரைம்

“மொட்டை மடியில் கிடந்த ஆண் சடலம்” - கடையை திறக்க சென்ற உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. செங்கற்களால் முகம் சிதைத்த கொடூரம்!

இருவரும் அங்கிருந்த கட்டை மற்றும் செங்கற்களால் அனுராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய  கணேஷ் பாபு, கொடுங்கையூர் சின்னாண்டிமடம் கடும்பாடி அம்மன் கோவில் இரண்டாவது தெருவில் சொந்தமாக ஸ்டீல் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு அருகிலேயே, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்காக வீடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு நிறுவனத்தில் பணியாற்றி வந்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 54 வயதுடைய அனுராஜ், ஓட்டேரியைச் சேர்ந்த 60 வயதுடைய தளபதி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் இரண்டாவது மாடியில் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, போதையில் இருந்த அனுராஜுக்கும் தளபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அனுராஜ், தளபதியை தாக்கிவிட்டு மொட்டை மாடிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தளபதியும், விஜயகுமாரும் அனுராஜை பின்தொடர்ந்து மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட தகராறில், இருவரும் அங்கிருந்த கட்டை மற்றும் செங்கற்களால் அனுராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அனுராஜின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தளபதியும், விஜயகுமாரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

murder spot

நேற்று சுமார் 11 மணியளவில் நிறுவனத்திற்கு வந்த உரிமையாளர் கணேஷ் பாபு, அனுராஜை தேடியுள்ளார். அப்போது மொட்டை மாடியில் அனுராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அனுராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், தப்பிச் சென்ற தளபதி மற்றும் விஜயகுமாரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து அனுராஜை கட்டை மற்றும் செங்கற்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, தளபதி மற்றும் விஜயகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.