ரஜினிகாந்தை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு.. “மக்களுக்கு நிறைய செய்யுங்கள்” - சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்...
vanni arasu meet rajinikanth
vanni arasu meet rajinikanth
Published on
Updated on
1 min read

தமிழக சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராவார். சமூகநீதி, சாதிய ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். கட்சியின் முக்கிய அரசியல் நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுள்ள நிலையில், வன்னி அரசுக்கு சமூகநீதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அமைச்சராக பதவியேற்று, தனது துறையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அமைச்சர் பதவியேற்ற பிறகு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்ற விருப்பம் வன்னி அரசுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வன்னி அரசு, “திரை உலகின் சூப்பர் ஸ்டார் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை சந்தித்த ரஜினிகாந்த், “நிறைய மக்களுக்கு செய்யுங்கள். வாழ்த்துகள்” என வாழ்த்தியதாகவும் வன்னி அரசு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்களையும் வன்னி அரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com