Chennai Mangadu Woman Stabbing Case 
க்ரைம்

“அடிக்கடி தனிமையில் இருந்த கள்ளக்காதலர்கள்” - திடீரென பேச மறுத்த காதலி.. மார்பில் கத்தியால் குத்திய காதலன்!

அவரைத் தாக்கி மார்புப் பகுதியில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்...

Mahalakshmi Somasundaram

சென்னை அருகே திருமணமாகி கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணை, பழக்கத்தை நிறுத்திய ஆத்திரத்தில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பெரிய கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதுடைய கஸ்தூரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கஸ்தூரி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஸ்தூரி தங்கி உள்ள பகுதியில் டைல்ஸ் வேலை செய்து வரும் 38 வயதுடைய சம்பத் என்பவருடன் கஸ்தூரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே சம்பத் அடிக்கடி கஸ்தூரி வீட்டிற்கு சென்று அவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் கடந்த சில வாரங்களாக கஸ்தூரி சம்பத்திடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததுடன், அவருடனான பழக்கத்தையும் நிறுத்தியுள்ளார். இதனால் சம்பத் ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (நவ 12) அதிகாலை கஸ்தூரியின் வீட்டுக்குள் நுழைந்த சம்பத், அவரைத் தாக்கி மார்புப் பகுதியில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி வலியால் அலறியபடி மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த கஸ்தூரியை மீட்டு சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவாக இருந்த சம்பத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்ணை, பழக்கத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.