க்ரைம்

“எதுக்கு இவ்வளவு வேகமா ஓட்டுறீங்க” - ஏரியாவில் மாஸ் காட்டிய நண்பர்கள்.. இரவோடு இரவாக வீடு தேடி சென்று வெட்டிய வாலிபர்கள்!

அவரது வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த விஜயராஜை எழுப்பி வம்பிழுத்த மதன்..

Mahalakshmi Somasundaram

சென்னை புளியந்தோப்பு காந்திநகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் 20 வயதுடைய விஜயராஜ். இவர் தனது நண்பரான பிரதீபன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் புளியந்தோப்பு காந்தி நகர் மூன்றாவது தெரு வழியாக தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த சிலர் ஏன் இந்த பக்கம் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

அதற்கு விஜயராஜ் மற்றும் அவரது நண்பரான பிரதீபன் “எங்கள் வண்டி நங்கள் எப்படி வேண்டுமானாலும் ஓட்டுவோம்” என அவர்களிடம் திமிராக பதில் கூறியுள்ளனர். எனவே இருதரப்பினருக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்கு இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அவர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆத்திரம் அடங்காத எதிர் தரப்பைச் சேர்ந்த மதன் என்பவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் விஜயராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்த விஜயராஜை எழுப்பி வம்பிழுத்த மதன் அவரிடம் வாக்குவாதம் செய்து அவரை வெட்ட முற்பட்டுள்ளார். அப்போது மதனுடன் சென்ற அவரது நண்பரான மணிகண்டன் என்பவர் கத்தியை வாங்கி விஜயராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் விஜயராஜுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து புளியந்தோப்பு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான மணிகண்டன் மற்றும் 33 வயதுடைய மதன் என இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபு மற்றும் மனோஜ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.