Chennai Nungambakkam sub inspector Raj Murder Case 
க்ரைம்

“காவலரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி” - தூக்க மாத்திரை கொடுத்து பக்கா பிளான்.. சம்பவத்தன்று வீட்டில் இருந்த தேவா யார்?

தேவாவுக்கும் செல்வராணிக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Mahalakshmi Somasundaram

சென்னை ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் 58 வயதுடைய ராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1992ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கும் 32 வயதுடைய செல்வராணி என்பவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில்,  நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 1-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட ராஜ், செல்வராணியை சட்டம் படிக்க வைத்துள்ளார். 

நேற்று (செப் 20) முன்தினம் ராஜ், குடும்பத்தினருடன் புரசைவாக்கத்தில் துணிகள் வாங்கியதுடன், பின்னர் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அன்று இரவு வீட்டின் கீழ்தள அறையில் ராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழே சென்று பார்த்த செல்வராணி, ராஜ் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் கிடந்ததாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆரம்பத்தில் ராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

ஆனால், சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் அறை முழுவதும் பெட்ரோல் வாசனை இருந்தது தெரியவந்தது. மேலும், சம்பவத்துக்கு முந்தைய நாள் ராஜின் நடவடிக்கைகளில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என போலீசார் கருதியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் ராஜின் வீட்டிற்கு வந்த ஒருவர், பின்னர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. எனவே சந்தேகமடைந்த போலீசார் ராஜ் மனைவி செல்வராணியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது “ராஜ் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், கடந்த 3 மாதங்களாக தான் அனுபவித்து வந்த கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கில் தனக்கு தெரிந்த தேவா மூலம் ராஜை கொலை செய்ய திட்டமிட்டதாகவும்” அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் போது ராஜ் விழித்துக் கொள்ல்லாமல் இருக்க தூக்க மாத்திரை கலந்த உணவை அவருக்கு கொடுத்து தூங்கச் செய்ததும், பின்னர் வீட்டிற்கு வந்த தேவா, ராஜ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேவாவுக்கும் செல்வராணிக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்வராணியை கைது செய்து தலைமறைவாக உள்ள தேவாவை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது சொந்த வீட்டிலேயே மனைவியின் தொடர்புடைய நபர் மூலம் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்