சென்னை பழைய ஜெயில் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பில் வசித்து வருபவர்கள் 23 வயதுடைய அப்பு மற்றும் 22 வயதுடைய இமான். கடந்த (ஆக 16) ஆம் தேதி இரவு, இவர்கள் இருவரும் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கார்த்திக் என்பவருடன் இணைந்து வீட்டின் அருகே உள்ள சாலையில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வள்ளுவர் நகரைச் சேர்ந்த 24 வயதுடைய ரித்தீஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பு, இமான் மற்றும் கார்த்திக் ஆகியோர் ரித்தீஷை வழிமறித்து, குடியிருப்பு பகுதியில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை சரமறிய தாக்கி அங்கிருந்து அனுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து இரவு சுமார் 10 மணியளவில், உணவு வாங்கிக்கொண்டு மின்ட் சந்திப்பில் இருந்து குடியிருப்பு நோக்கி அப்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரித்தீஷ் தனது இருசக்கர வாகனத்தில் வந்து அப்பு மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அப்புவின் இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், ரித்தீஷ் அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு, ரித்தீஷ் தனது நண்பர்களுடன் சென்று அப்புவின் நண்பரான கோவிந்தன் என்பவரிடம், தன்னை ஏன் தாக்கினீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ரித்தீஷின் தரப்பில் இருந்த விஜய், கோவிந்தனை கத்தியால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பு, இமான் மற்றும் கார்த்திக் ஆகியோர் விஜயை விரட்டிச் சென்று கத்தியால் வெட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (20) என்பவரையும் அப்பு தரப்பினர் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்களால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த யானைகவுனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அப்பு, இமான் மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காயமடைந்த விஜய் மற்றும் ஆனந்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த யானைகவுனி போலீசார், அப்பு, இமான் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, விஜயை ஒரு கும்பல் விரட்டிச் சென்று கத்தியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் சென்னை பழைய ஜெயில் சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்