“உன் அந்தரங்க போட்டோக்களை அனுப்பு” - மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. உடந்தையாக இருந்த சக ஆசிரியை!

சண்முக சுந்தரராஜ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது, அதே பள்ளியில் பணியாற்றும் திவ்யா என்ற ஆசிரியைக்கு...
thanjavur pocso
thanjavur pocso
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சண்முக சுந்தரராஜ் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து “உன் அந்தரங்க போட்டோக்களை அனுப்பு” பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் ஆசிரியர் என்பதால் அச்சமடைந்த மாணவி, இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஆசிரியரின் தொல்லை நாளுக்கு நாள் எல்லை மீறியதாகவும், பள்ளியில் நேரடியாக பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன், ஆசிரியர் சண்முக சுந்தரராஜை போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சண்முக சுந்தரராஜ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது, அதே பள்ளியில் பணியாற்றும் திவ்யா என்ற ஆசிரியைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததாகவும், இருப்பினும் அவர் இதைத் தடுக்காமல் சண்முக சுந்தரராஜுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவிக்கு நடந்ததாக கூறப்படும் பாலியல் தொந்தரவு சம்பவத்தை மறைக்க முயன்றதாகவும், ஆசிரியருக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் திவ்யாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, மாணவிக்கு எவ்வளவு காலமாக தொந்தரவு அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com