Chennai Palavakkam Wife Murder 
க்ரைம்

“கணவனை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாரா?” - நள்ளிரவில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மனைவி.. விசாரணையில் வெளியான பின்னணி!

மனைவியைக் கொலை செய்த பிறகு, விவேக் தனது இரண்டரை வயது மகளை அழைத்துக்கொண்டு தாம்பரம்...

Mahalakshmi Somasundaram

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பாலவாக்கம் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொலை செய்துவிட்டு, இரண்டரை வயது பெண் குழந்தையைத் தனது சகோதரர் வீட்டில் விட்டுச் சென்ற கணவர், பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருக்காரைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய விவேக். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த 33 வயதுடைய முத்துப்பிரியாஎன்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

பி.எஸ்சி. விலங்கியல் பட்டதாரியான முத்துப்பிரியாவுக்கும் விவேக்குக்கும் இரண்டரை வயதில் திருவெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது. விவேக், சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் கடந்த ஒரு மாதமாக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பாலவாக்கம் பெரியார் நகர், பச்சையப்பன் 8-வது குறுக்குத் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே, முத்துப்பிரியா தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி விவேக் அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ 05) இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த விவேக், வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு முத்துப்பிரியாவைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்துப்பிரியா, அதிகளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியைக் கொலை செய்த பிறகு, விவேக் தனது இரண்டரை வயது மகளை அழைத்துக்கொண்டு தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள தனது சகோதரர் வினோத் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை விட்டுவிட்டு, பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துப்பிரியாவின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விவேக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை கே.கே.நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மனநலப் பாதிப்பு தொடர்பாகச் சிகிச்சை பெற்றுவந்தது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் 10 நாட்கள் மட்டுமே மருந்துகளை உட்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட விவேக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்