“இளம் பெண்ணுடன் தனியறையில் இருந்த வாலிபர்” - பேட்டால் அடித்தே கொலை செய்த தந்தை.. வேலைக்காக பெங்குளுரு சென்றவருக்கு சோகம்!

தனது மகளும் கிரணும் தனி அறையில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த ஆனந்த்...
Bengaluru Businessman Murder Case
Bengaluru Businessman Murder Case
Published on: 
Updated on: 
2 min read

பெங்களூருவில் தனது 19 வயது மகளுடன் தனி அறையில் இருந்த இளைஞரை, கிரிக்கெட் பேட் மற்றும் பைப்பால் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மகளுடன் அந்த இளைஞர் நெருக்கமாகப் பழகி வந்ததை அறிந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆனந்த், இவர் பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஸ்வீட் கார்ன் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருவெகப்புரா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்பவர் தனது சகோதரருடன் வேலை செய்து வந்துள்ளார். ஆனந்துக்கு 19 வயதில் மகள் உள்ளார். அவர் மைசூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

அப்போது ஆனந்திடம் வேலை செய்து வந்த கிரணுக்கும் அவரது மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருக்கமாகப் பழகி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாளடைவில் ஆனந்துக்குத் தெரியவந்துள்ளது. இதனால், கிரண் தனது மகளைக் காதலித்து திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கலாம் என அவர் அச்சமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கிரண் மீது ஆனந்த் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் (கடந்த 2) -ஆம் தேதி ஆனந்தின் மகள் பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, தமிழ்நாட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு ஆனந்த் தனது மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது தனது மகளும் கிரணும் தனி அறையில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த ஆனந்த் கிரணைப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் உடனடியாக தனது மகளைச் சிக்கபள்ளாப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் தணியாத ஆனந்த், கிரிக்கெட் பேட் மற்றும் பைப் உள்ளிட்டவற்றைக் கொண்டு கிரணைத் தொடர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது வயிறு மற்றும் மார்புப் பகுதியில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிரண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அச்சமடைந்த ஆனந்த் ஆட்டோவை வரவழைத்து கிரணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கிரணைத் தாக்கிக் கொலை செய்ததாக ஆனந்தைக் கைது செய்தனர். இதுகுறித்து பெங்களூரு வடகிழக்கு பிரிவு துணைக் காவல் ஆணையர் மிதுன் குமார் கூறுகையில், தனது மகளுடன் கிரண் தனி அறையில் இருந்ததைப் பார்த்த பிறகே ஆனந்த் அவரைத் திட்டமிட்டுத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகளுடன் இளைஞர் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை அடித்துக் கொலை செய்ததாகத் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்