Chennai Perungudi Wife Murder 
க்ரைம்

“மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்” - விடிந்ததும் பூட்டி இருந்த வீடு.. நள்ளிரவில் நடந்தது என்ன?

சுமார் 9 மணியளவில் மனைவி சுதாவின் துப்பட்டாவை பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்ததாகவும்...

Mahalakshmi Somasundaram

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகர், தாசரதன் தெருவைச் சேர்ந்தவர் 35 வயதுடைய லோகநாதன். ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் (Zepto) டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி 28 வயதுடைய சுதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த (அக் 5) ஆம் தேதி இரவு லோகநாதனும் சுதாவும் வீட்டில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது சுதா மேலும் மது வேண்டும் என கணவரிடம் கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், இரவு சுமார் 9 மணியளவில் மனைவி சுதாவின் துப்பட்டாவை பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்ததாகவும், இதில் சுதா உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி உயிரிழந்தது தெரியாமல், மதுபோதையில் லோகநாதன் அங்கேயே தூங்கியதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் எழுந்த அவர், மனைவியை எழுப்ப முயன்றபோதுதான் சுதா உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மறுநாள் காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற லோகநாதன், தனது அக்கா வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னர் அவரது அறிவுறுத்தலின் பேரில் வழக்கறிஞர் ஒருவரை அணுகிய லோகநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மனைவியை கொலை செய்துவிட்டு லோகநாதன் நீதிமன்றத்தில் ஆஜரான தகவல் துரைப்பாக்கம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த துரைப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் விமல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுதொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லோகநாதன் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், இதுகுறித்து சுதா அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுதா கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்