க்ரைம்

“பெண்ணின் உடல் பாகங்கள் வைத்து பிரியாணியா?” - வீட்டில் இருந்து மீட்கப்பட்ட டபரா.. வெளிவருமா சிவப்பு சூட்கேஸ் கொலையின் பின்னணி!

இதையடுத்து போலீசார் ஹைதுல் நிஷாவின் பின்னணி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mahalakshmi Somasundaram

டெல்லி ஆக்ராவில் கடந்த (ஆக 07) ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸில், ஆணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அது பெண்ணின் சடலம் என தகவல் வெளியாகியுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் பாகங்களுடன் சென்னையைச் சேர்ந்த துணிக்கடையின் பாலித்தீன் பையும் இருந்ததால், இந்த கொலை சென்னையில் நடந்திருக்கலாம் என ஆக்ரா போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து சென்னை ரயில்வே போலீசாரின் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, (ஆகஸ்ட் 03) ஆம் தேதி ஆண் மற்றும் பெண் என இருவர் சிவப்பு நிற சூட்கேஸுடன் ரயில் நிலையத்திற்கு வந்தது தெரியவந்தது. அவர்கள் அந்த சூட்கேஸை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரையிலான பல்வேறு ரயில் நிலையங்களில் பதிவான சுமார் 350 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அந்த ஆண் மற்றும் பெண் பூங்கா ரயில் நிலையம் வழியாக சென்று, கூடுவாஞ்சேரி பகுதியில் இறங்கியிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கூடுவாஞ்சேரி பகுதியில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கிடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு பெரிய பாத்திரத்தில் அதாவது பிரியாணி சமைக்கும் டபராவில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் உடல் பாகங்கள் கொதிக்க வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை தடயவியல் ஆய்வுக்காக போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள் குறித்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 38 வயதுடைய ஹைதுல் நிஷா என்ற பெண் அங்கு தங்கியிருந்ததாகவும், அவருடன் ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி என்ற கணவன் மனைவி தங்கியிருந்ததாகவும் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஹைதுல் நிஷா பற்றி விசாரித்த நிலையில் அவர் தாம்பரம் பகுதியில் பணியாற்றி வந்ததும் அதே பகுதியில் மகனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரியவந்தது. எனவே இது குறித்து நிஷாவின் மகனிடம் விசாரித்த போது தாயின் நடத்தை பிடிக்காததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஹைதுல் நிஷாவின் பின்னணி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஹைதுல் நிஷாவுக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய  தொடர்பு இருந்ததாகவும், அந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் பணம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட வேறு காரணங்கள் இருந்தனவா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் மாணிக் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி ஆகியோரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ராவில் ரயிலில் கிடைத்த சிவப்பு சூட்கேஸ் முதல், கூடுவாஞ்சேரி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வரை அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்