சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வழக்கம்போல் ரயில்வே ஊழியர்கள் பொதுப்பெட்டியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெட்டியில் நீண்ட நேரமாக கேட்பாரற்ற நிலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆக்ரா ரயில்வே போலீசார், சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், சடலத்தை துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் கவரில் சுற்றி வைத்திருந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆக்ரா ரயில்வே போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே அந்த சூட்கேஸ் கொண்டு வரப்பட்டதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும், சம்பவத்தன்று ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்ததும், பின்னர் அந்த சூட்கேஸை ரயில் பெட்டியில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதன்பிறகு அவர்கள் பூங்கா ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து வேறு ஒரு ரயிலில் பயணம் செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சூட்கேஸை ரயிலில் வைத்துவிட்டுச் சென்ற ஆண் மற்றும் பெண் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், கொலை செய்யப்பட்ட நபர் யார், அவரை எதற்காக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் அனுப்பினர் என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சடலத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த பிரபல ஜவுளிக்கடை கவர் மற்றும் அதனுடன் இருந்ததாக கூறப்படும் சில ரசீதுகள், பில்கள் உள்ளிட்ட தடயங்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தடயங்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை முதலில் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸுக்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்துள்ள தடயங்களின் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் ரயில்வே போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்