viyasarbadi murder  
க்ரைம்

“வியாசர்பாடியில் நடந்த கொலை” - மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்.. பேசிய அரை மணி நேரத்தில் நடந்தது என்ன?

ஓடி வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சிவா. காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வரும் இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த 23 வயதுடைய வெண்ணிலா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சிவாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி வெண்ணிலாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெண்ணிலா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வியாசர்பாடி மூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தனது தாய் தேவி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதியம் வெண்ணிலா தனது அக்கா மோகனாவின் வீட்டில் இருந்த நிலையில் குழந்தைகள் அவரது பாட்டி தேவியுடன் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிவா, மனைவி வெண்ணிலாவை சந்தித்து தனியாக பேசியுள்ளார். பேசிய அரை மணி நேரத்தில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தில் சிவா சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் மற்றும் அக்கா உள்ளிட்டோர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். சிறிது நேரத்தில் வெண்ணிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்