கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது பெற்றோர் சிங்கப்பெண் சிறப்பு படையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரில், தனது மகளின் உடலில், குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் சிறிய கீறல்கள் இருந்ததாகவும், இதனால் பள்ளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், உண்மை என்ன என்பதை காவல்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் குற்றம்சாட்டாமல் சந்தேகத்தின் அடிப்படையிலேயே புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட சிங்கப்பெண் சிறப்பு படை போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பள்ளியின் முதல்வரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளி முதல்வரிடம் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதுவரை நடைபெற்ற விசாரணையில், குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித முதற்கட்ட ஆதாரமோ அல்லது முகாந்திரமோ கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி பள்ளி முதல்வரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கின் உண்மை நிலையை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால், குழந்தைகள் தொடர்பான விசாரணை நடைமுறைகளைப் பின்பற்றி, சிறுமியிடமும் மீண்டும் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை யாரும் குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை என்றும், மருத்துவ அறிக்கை, சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 5 வயது சிறுமி தொடர்பாக எழுந்துள்ள இந்த புகார், சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.