“நெல்லை இரட்டை கொலையில் 20 ஆண்டுகால தொடரும் முன்பகை” - பழிக்கு பழியாக கொல்லப்பட்ட 9 பேர்.. அதிரவைக்கும் பகையின் பின்னணி!

குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு...
“நெல்லை இரட்டை கொலையில் 20 ஆண்டுகால தொடரும் முன்பகை” - பழிக்கு பழியாக கொல்லப்பட்ட 9 பேர்.. அதிரவைக்கும் பகையின் பின்னணி!
Published on
Updated on
2 min read

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய காளிமுத்து. விவசாயியான இவர், கடந்த 2-ஆம் தேதி மாலை தனது இரண்டு மகன்களான 15 வயது சின்னத்துரை மற்றும் 5 வயது ஜெயராஜுடன் மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வீரவநல்லூர் அருகே மாதுடையார்குளம் பகுதியில் சென்ற போது, அவர்களை பின் தொடர்ந்து கார்களில் வந்த மர்ம கும்பல், காளிமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது திட்டமிட்டு காரை மோதியதாக கூறப்படுகிறது.

அதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த காளிமுத்துவை அந்த மர்ம கும்பல் கொடூரமாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தலை துண்டித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில், வாகனம் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அவரது 5 வயது மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மகன் சின்னத்துரை காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

accust
accust

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2006-ஆம் ஆண்டு உறவினர்களாக இருந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே தெருக் குழாயில் தண்ணீர் பிடித்த போது ஏற்பட்ட தகராறு, கடந்த 20 ஆண்டுகளாக உயிர்ப்பலி வாங்கும் பகையாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நீண்டகால மோதலில் ஏற்கனவே இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோரின் கொலையால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் (29) ஆகிய மூவரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளை தேடி தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்த நிலையில், இன்று அதிகாலை முத்துப்பட்டன், மணிகண்டன், மகாலிங்கம் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட பின்னரே காளிமுத்து மற்றும் அவரது மகனின் உடல்களை பெற்றுக்கொள்வோம் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியை பலப்படுத்தியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பிரச்சினையில் தொடங்கிய பகை, தலைமுறைகளை கடந்தும் தொடர்ச்சியான கொலைகளுக்கு காரணமாகி வரும் இந்த சம்பவம், நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com