க்ரைம்

“எங்க உடம்பை போஸ்ட்மார்ட்டம் பண்ணாம புதைச்சிடுங்க” - குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர்… கண்கலங்க வைக்கும் கடைசி வீடியோ!

இருப்பினும் இலக்கியா உடல்நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜே.இ. ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் கமலேஷ். இவருக்கு அதே பகுதியை சிறந்த இளகிய என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 10 வயதில் எக்சிதா ஏஞ்சல் என்ற பெண் குழந்தையும் இருந்தது. இலக்கியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் மத்தம்பாளையம் அருகே உள்ள தம்பு நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலக்கியாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் புற்று நோயால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் இலக்கியா அவதிப்பட்டு வந்திருக்கிறார். எனவே கமலேஷ் பல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருக்கிறார். இருப்பினும் இலக்கியா உடல்நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி கமலேஷ் “எனது மனைவிக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது எங்கு சிகிச்சை பார்த்தும் தீர்வு கிடைக்கவில்லை எனவே நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் புதைத்து விடுங்கள் மேலும் எனது இன்சூரன்ஸ் பணம் ரூபாய் 10 லட்சத்தை தேவாலயத்திற்கு கொடுக்கிறேன்.

நான் வேலையில் இருக்கும் போது உயிரிழப்பதால் எனக்கு வரும் தொகையை ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள்” என பேசி அவரது போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருக்கிறார். பின்னர் உணவில் விஷம் கலந்து இருவரும் சாப்பிட்டு விட்டு குழந்தைக்கும் கொடுத்து தற்கொலை செய்து கொண்டனர். மாறு நாள் வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். மூவரின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கணவன் மற்றும் மனைவியின் போனை கைப்பற்றி சோதனை செய்ததில் கமலேஷ் போனில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். புற்று நோயால் அவதிப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கணவன் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்