கோவை மாவட்டம், முட்டத்துவயல் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய மீனாட்சி. இவரது மகன் 38 வயதுடைய அனந்தபாபு, என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கல்பனா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணம் தொடர்பாக தாய் மீனாட்சிக்கும் மகன் அனந்தபாபுவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ. 24) இரவு சுமார் 9 மணியளவில் கல்பனா மீனாட்சியின் உறவினர்களுக்கு போன் செய்து அவர் இறந்து விட்டதாகவும் வீட்டிற்கு வந்த போது சடலம் ஆடைகளின்றி கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மீனாட்சி வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் அவசர ஊர்திக்கு போன் செய்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீனாட்சி உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் இது குறித்து அனந்தபாபு மற்றும் கல்பனாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களது பதில்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன, சம்பவத்தன்று கல்பனா கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த மீனாட்சி மற்றும் அவரது மகன் அனந்தபாபுவிற்கு இடையே வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனந்தபாபு மதுபோதையில் தாய் மீனாட்சியை குத்தி கொலை செய்துவிட்டு உடலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வைத்த கல்பனா சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து தடயங்களை அழிக்கும் நோக்கில் மீனாட்சியின் உடைகளை களைத்து உறவினர்களுக்கு தகவல் அளித்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனந்தபாபு மற்றும் கல்பனா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் என்ன? வேறு யாருக்காவது கொலையில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை மகனே குத்தி கொலை செய்த நிலையில் அதை மறைக்க மருமகள் உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.