மாறி மாறி அடித்துக்கொண்ட மனைவிகள்… கொன்று காட்டுக்குள் புதைக்கப்பட்ட சடலங்கள்! நாடகமாடி மாட்டிக்கொண்ட அண்ணன் தம்பி?

இதையடுத்து, அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்
double murder
Published on: 
Updated on: 
2 min read

குடும்பத் தகராறு காரணமாக மனைவிகளையே கொலை செய்து, அவர்களது உடல்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று வனப்பகுதியில் புதைத்த இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்கள் சிவ சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹூ ஆவர். இதில் சிவ சங்கர் சாஹு ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மினி பிரியா (28) என்ற மனைவியும், அவரது தம்பி நவீன் சாஹுவுக்கு ராதிகா குமாரி (20) என்ற மனைவியும் இருந்துள்ளனர்.

இரண்டு சகோதரர்களின் குடும்பங்களும் ஒரே பகுதியில் வசித்து வந்த நிலையில், மினி பிரியா மற்றும் ராதிகா குமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த குடும்ப பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்ததால் சகோதரர்கள் இருவரும் தங்களது மனைவிகள் மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை அன்று இரு தரப்பினருக்கும் இடையே சிலர் தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து, இரண்டு சகோதரர்களும் தங்களது மனைவிகளுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதன்பின்னர், சில நாட்களிலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, கடந்த திங்கட்கிழமை சிவ சங்கர் சாஹுவும், நவீன் சாஹுவும் இணைந்து தங்களது மனைவிகளான மினி பிரியா மற்றும் ராதிகா குமாரி ஆகியோரைக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடல்களை மறைப்பதற்காக சிவ சங்கரின் ஆம்புலன்ஸிலேயே அவர்களின் சடலங்களை ஏற்றிச் சென்றுள்ளனர் .

இதையடுத்து, கும்லா மாவட்டத்திற்கு அருகில் உள்ள சிம்டேகாவுக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள காட்டுப்பகுதியில் தங்கள் மாணவிகளின் உடல்களையும் புதைத்துவிட்டுத் திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கும்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹாரிஸ் பின் ஜமா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த அன்று, காலை சுமார் 9 மணியளவில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினர் அவர்களுடன் கடைசியாகப் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் வழக்கம்போலவே பேசியதாகவும், எந்தப் பிரச்சினையும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், அதன்பிறகு இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சிவ சங்கர் சாஹுவும், நவீன் சாஹுவும் தங்களது குழந்தைகளுடன் கும்லா காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு தங்களது மனைவிகள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக கூறி, அவர்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். ஆனால், சகோதரர்கள் இருவரும் அளித்த தகவல்களில் சில முரண்பாடுகள் இருந்ததால் காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து தங்களது மனைவிகளைக் கொலை செய்ததையும், உடல்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று வனப்பகுதியில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சகோதரர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் பயன்படுத்திய ஆம்புலன்ஸை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கோடரியையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, புதன்கிழமை கும்லா மற்றும் சிம்டேகா மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் இணைந்து பிரு வனப்பகுதிக்குச் சென்றனர். நீதிபதி தீபக் குமார் முன்னிலையில், அந்தப் பகுதியில் தோண்டிப் பார்க்கப்பட்டது. அப்போது புதைக்கப்பட்டிருந்த மினி பிரியா மற்றும் ராதிகா குமாரி ஆகிய இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

பின்னர், இரண்டு உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிம்டேகா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சிவ சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சித் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்களின் பெற்றோர்களான சமேஷ்வர் சாஹு மற்றும் திலேஸ்வரி தேவி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இரண்டு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையைச் சமரசம் செய்து வைத்த சில நாட்களிலேயே, இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனைவிகள் காணாமல் போனதாகக் கூறி, தங்களது குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த கணவர்களே கொலைக் குற்றத்தில் சிக்கியிருப்பது இந்த வழக்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.