Coimbatore Woman Murder 
க்ரைம்

“மூன்றாவது கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்” - கால்வாயில் மிதந்த சடலம்.. பிளான் போட்டு கொலை செய்தது யார்?

நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது...

Mahalakshmi Somasundaram

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரை, நகைகளைத் திருப்பித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கால்வாயில் தள்ளிக் கொலை செய்ததாகக் கள்ளக்காதலன் மீது புகார் எழுந்துள்ளது. நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்குத் திருமணமாகி இரண்டு கணவர்கள் பிரிந்து சென்ற நிலையில், மூன்றாவது கணவரான கணேசனுடன் கணபதி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில், கீதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது . இந்த உறவின் காரணமாக, கீதா அவ்வப்போது கதிரவனுக்குத் தங்க நகைகளைக் கொடுத்து உதவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கீதா கொடுத்த நகைகளைத் திருப்பித் தராமல் கதிரவன் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அது அடிதடி வரை சென்றுள்ளது. இதுதொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கீதாவைக் கொலை செய்ய கதிரவன் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது நண்பரான சூலூரைச் சேர்ந்த சண்முக வடிவேலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் உள்ள கிருபாகரன் தென்னந்தோப்புக்கு அருகே இருக்கும் கால்வாயில் கீதாவைத் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாது என இருவரும் திட்டமிட்டதாக தெரிகிறது.

அதன்படி, நகைகளை திருப்பித் தருவதாகக் கூறி கீதாவைக் கதிரவன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், திட்டமிட்டபடி அவரைக் கால்வாயில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கால்வாயில் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்றவர்கள் உடலை மீட்டு உடனடியாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கீதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்ட பின்னரே, இந்தக் கொலைச் சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்டக் காவல்துறையினருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கதிரவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலையில் அவரது நண்பர் சண்முக வடிவேலுக்கும் தொடர்பு உள்ளதா, இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.