க்ரைம்

“மூன்றாவது கணவர் மீது புகாரளித்த மனைவி” - தகாத தொழிலில் ஈடுபட வற்புறுத்தல்.. கைது செய்யப்படுவாரா சார்பு ஆய்வாளர்?

அப்போது ஆய்வாளருடன் இருந்த காவலரான ஜெயபாண்டியன் அடிக்கடி நியாராபானு வீட்டிற்கு வந்து அவருக்கு உதவி செய்து வந்துள்ளார்.

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய நியாரா பானு. இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஜூபைர் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில்  2011-ம் ஆண்டு  மஸ்கட்டில் விபத்தில் இறந்துள்ளார். இதையடுத்து தனியாக வசித்து வந்த நியாரா பானுவிற்கு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து நியாரா பானுவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நியாராபானுவை திருமணம் செய்த ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவலர் குடியிருப்பில்  வசித்து வந்துள்ளார். அப்போது சில மாதங்களிலேயே நியாரா பானுவை திருமணம் செய்த ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆய்வாளருடன் இருந்த காவலரான ஜெயபாண்டியன் அடிக்கடி நியாராபானு வீட்டிற்கு வந்து அவருக்கு உதவி செய்து வந்துள்ளார். பின்னர் ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி நியாராபானுக்கு உதவி செய்ய வந்த சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் “நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்றும் நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ்வோம்” என நியாராபானுவிடம் கூறியுள்ளார். 

அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு நெருக்கமான சிலர் முன்னிலையில் கோவில் ஒன்றில் வைத்து நியாராபானுவும், சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு  சிங்கம்புணரியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். பின் 2016 ஆம் ஆண்டு பணி மாறுதலால் ஜெயபாண்டி மதுரைக்கு வந்தபோது தனது மனைவி நியாராபானுவுடன் ஐராவதநல்லூரில் வீடு எடுத்து வசித்துள்ளனர். இதனிடையே ஜெயபாண்டி அடிக்கடி போனில் பேசியபடி இருந்துள்ளார். இதுகுறித்து நியாராபானு சந்தேகப்பட்டு கேட்டபோது தன் அத்தை மகள் லாவண்யாவுக்கு புற்றுநோய் இருப்பதால் ஆறுதலுக்காக பேசி வருவதாக கூறியுள்ளார்.

இதனிடையே சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து நியாராபானுவை அடித்து, கொடுமைப்படுத்தி வந்ததாகவும் பின்னர் நியாராபானுவை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததை மறைத்து அவரது அத்தை மகள் லாவண்யாவை திருமணம் செய்துள்ளார். ஜெயபாண்டிக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அவரது அத்தை மகள் லாவண்யா தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்ததாக காவல் நிலையத்தில் ஜெயபாண்டி மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த நிலையில் ஜெயபாண்டி லாவண்யாவை இரண்டாவது திருமணம் செய்தது நியாரா பானுக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நியாரா பானு சார்பு ஆய்வாளர்  ஜெயபாண்டியன் கேட்டபோது பெற்றோர் வற்புறுத்தலினால் கண்துடைப்புக்காக திருமணம் செய்து கொண்டேன் என்றும் “வா நாம் நம் வீட்டுக்கு போவோம்” என்று கூறி 2 வருடங்களுக்கு முன் காவல்துறை துணை ஆணையாளரிடம், எழுதிக் கொடுத்துவிட்டு வந்து பின்னர் நியாராபானுவுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில்  சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் தன்னுடன் வேலை பார்க்கும் ரமேஷ் என்பவருடன் நியாராபானு பேசி பழக வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார். எனவே தனது கணவரான சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் தன்னை தகாத தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதிக்கும் எண்ணத்தில் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் பெயரிலிருந்து வீடு மற்றும் சொத்துக்கள் நகைகள் பணத்தை பறித்து விட்டு மிரட்டி வருவதாகவும் கூறி நியாரா பானு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.

அந்த மனுவில் தனது கணவரான சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன் காவல்துறை அதிகாரி என்ற பொறுப்பை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து அவருக்கு கீழ் பணிபுரியும் ரமேஷ் என்பவரை உறுதுணையாக கொண்டு, தன் வாழ்க்கையை நாசமாக்க நினைப்பதால் அவர் மீது  சட்டப்படியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.