தீபாவளி என்றால் அளவிலாத மகிழ்ச்சி கொண்டாட்டம், ஒருபக்கம் இருந்தாலும், இந்த பாட்டாசு என்று வரும்போது ஒருவித பயம் தொற்றிக்கொண்டே இருக்கிறது. சிறுவர் முதல் பெரியோர் வரை பட்டாசு மோகம் ஒரு போதும் குறைவதில்லை, எந்த அளவுக்கு பட்டாசுகள் மகிழ்ச்சியை அழைத்தருகின்றனவோ, அதே சமையத்தில் ஒரே நொடியில் ஒட்டுமொத்தமாக நமது மகிழ்ச்சியை புரிந்துகொள்ளும் தன்மையும் பட்டாசுகளிடம் உண்டு. அதை விற்பவர்களும், வாங்குபவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அப்படி பாதுகாப்பின்றி விற்கப்பட்ட வெடியால் 4 உயிர் பறிபோயுள்ளது பட்டாபிராம் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த தண்டுறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு ரக வெடிகள் விற்கப்பட்டு வந்தது. நேற்றைய தினம் மதியம் மூன்று மணி அளவில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் எதிர்பாராத விதமாக திடீரென வெடிக்க தொடங்கின. இதனால் வீடு முழுவதும் தீப்பற்றி பரவ தொடங்கியது. இதில் தீபாவளி பட்டாசு வாங்க வந்த திருநின்றவூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சுனில் பிரகாஷ் (22) யாசின்(28) மற்றும் நாட்டு வெடி விற்பனையில் ஈடுபட்ட இருவர் என நான்கு பேர் தீக்காயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கினர்.
மேலும் தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போலீசார் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது நான்கு பேரும் உயிரிழந்து இடிபாடுகளில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் துணை ஆணையர் அப்துல் கான் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்கர்களிடம் பேசும் போது நாட்டு வெடிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில்தான் விபத்துக்கான முழு காரணம் தெரியவரும்” எனக்கூறினார்.
ஆனால் சம்பவத்தில் நாட்டு வெடி விற்பனை செய்யும் விஜய் என்பவரின் தந்தை ஆறுமுகத்தை கைது செய்து பட்டாபிராம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜய் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.