Kattumannarkoil Lawyer Attack 
க்ரைம்

“அதிகாலையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கறிஞர்” - 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.. காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி!

அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அவரைத் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில், நேற்று (அக் 09) ஆம் தேதி காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த வழக்கறிஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்க விக்ரமன். வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

உடல் நலத்தில் அக்கறை கொண்ட விக்ரமன் தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று காலை செட்டித் தெரு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வழக்கம் போல தங்க விக்ரமன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அவரைத் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தங்க விக்ரமனை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்க விக்ரமனுக்கும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணங்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்