நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஆபேல் ராஜா. இவரது மனைவி மரியா ஜெயா (வயது 41). ஆபேல்ராஜா கோவையில் வேலை பார்த்து வருகிறார். மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்த நிலையில், பல்வேறு ஊர்களிலும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் சென்று அவர்களுக்கு உதவி செய்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் அவரது கணவர் ஆபேல் ராஜா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். மரிய ஜெயா நெல்லைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, மேலும் அவரது தொலைபேசியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என் சொல்லப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த ஆபேல்ராஜா 10ம் தேதி காலையில் முக்கூடல் போலீசில் தனது மனைவி காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதன்படி போலீசார் பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து மரியா ஜெயாவை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் டவுனில் கல்லணை மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அந்த சடலம் மாயமான மரியஜெயா என்பது தெரியவந்தது.
இதையடுத்து மரிய ஜெயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து மர்மச்சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை என்றும் தெரியவந்தது. இதனிடையே பிரேத பரிசோதனையில் அவர் தலையில் காயங்கள் இருந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்நிலையில் அவரை கொலை செய்த நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தபட்டு வந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட மரிய ஜெயா எங்கு சென்றாலும் வேலைகள் முடிந்ததும் இரவில் சிங்கம்பாறைக்கு சென்று குழந்தைகளை கவனித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஊர் ஊராக சென்று வரும் மரிய ஜெயா ஆலங்குளத்தில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். டவுன் கல்லணை பள்ளி அருகே இருந்த வடக்கை வீட்ட சம்பவத்தன்று அவர் டவுனுக்கு வந்தபோது, அவருடன் ஏற்கனவே பழக்கமான தச்சநல்லூர் செல்வவிக்னேஷ் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த குமார் மகன் சுரேஷ்குமார்(26) வந்துள்ளார்.
அந்த வீட்டில் வைத்து 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரத்தில் சுரேஷ்குமார் கட்டையால் மரிய ஜெயாவை பின்பக்க தலையில் அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா?, பெண்ணிடம் பறித்த நகைகள் எங்கே? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.