பெங்களூருவில் தாமதமான பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற போர்வையில் விருந்துக்கு வரவழைக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை அன்று காவல்துறை த்ராபைல் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஜூன் 30 அன்று பெங்களூருவில் உள்ள தலகட்டபுரா காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்துள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, சோமசேகர் என்ற நபருடன் அந்த பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இருவரும் சிறிது காலமாக ஒருவரையொருவர் அறிந்துள்ளனர். தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் பலமுறை நேரில் சந்தித்தும் உள்ளனர்.
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. சோமசேகரால் நேரில் வாழ்த்து தெரிவிக்க முடியாததால், வேறொரு நாளை குறிப்பிட்டு (ஜூன் 30) ஒன்றாகக் கொண்டாடுவதற்காக அவர் அந்த பெண்ணை தலகட்டபுராவிற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அழைப்பின் பேரில், அந்தப் பெண் ஜூன் 30 அன்று மாலை 5 மணியளவில் அப்பகுதிக்கு வந்து, அவருக்கு கூறப்பட்ட ஒரு ஹோட்டலுக்கு அருகில் சென்றுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சோமசேகர் தனது நண்பர்கள் சிலரையும் அழைத்து, பிறந்தநாளை அங்கே கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் சோமசேகர் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அந்த பெண்ணை கேட்டுக்கொண்டதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்குப் பதிலாக ஒரு ஹோட்டலுக்குச் செல்லலாம் என்று அவர் பரிந்துரைத்தபோது, முதலில் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டுப் பிறகு ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரது நண்பர்கள் நான்கு பேர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சிறிது நேரம் ஒன்றாக இருந்து உணவு அருந்தியுள்ளனர். பிறகு, சோமசேகரும் அவரது நான்கு நண்பர்களும் அந்த பெண்ணுக்கு ஒரு குளிர்பானம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை அருந்திய பிறகு, அவருக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அந்த பெண்ணால் முழுமையாக சுயநினைவுடன் இருக்க முடியவில்லை என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். புகாரின்படி, அவர் அரை மயக்க நிலையில் இருந்தபோது, ஐந்து பேரில் ஒருவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், மற்றவர்கள் வெளியே கூடத்தில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அப்பெண் முழு சுயநினைவுடன் இல்லை என்றும், அதனால் குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. "புகார் கிடைத்தவுடன், ஒரு பெண் உதவி ஆய்வாளர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை கூறி, அவருக்கு ஆறுதல் அளித்து, அவரது விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். விசாரணையின் போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் 'அமரேஷ்' என அடையாளம் காணப்பட்டுள்ளார், என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணையின் அடிப்படையில், அமரேஷ், சோமசேகர் மற்றும் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.