டெல்லியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் திறந்தவெளி பகுதியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்று சிறார்கள் மற்றும் 19 வயது இளைஞர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று அவர்கள் டெம்போவில் ஒன்றாக மது அருந்தியதாகவும், அதன் பின்னர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறுமியை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை திறந்தவெளி பகுதியில் வீசி விட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் உடல் குறைந்தது 8 முறை கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உடல் மோசமாக சிதைந்திருந்ததால், அது பெண்ணின் உடலா என்பதைக்கூட ஆரம்பத்தில் உடனடியாக உறுதி செய்ய முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் (செப் 12) ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை குஷக் சாலையை ஒட்டிய திறந்தவெளிப் பகுதியில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். உடலின் சில பகுதிகளை தெரு நாய்கள் கடித்திருந்ததாகவும், ஒரு கை உடலில் இருந்து தனியாக கிடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சடலத்தை அடையாளம் காணவும், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியவும் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் தகவலின்படி, சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. சிறுமி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வருவது வழக்கம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். நேரடி சாட்சிகள் இல்லாததுடன், ஆரம்பகட்டத்தில் சந்தேக நபர்களின் அடையாளமும் தெரியாததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
சிறுமியின் நடமாட்டம், சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் தொடர்பான காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்ட போலீசார், மூன்று சிறார்கள் மற்றும் 19 வயது இளைஞர் என 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நான்காவது நபர், பாலியல் தாக்குதலில் தனக்கு தொடர்பில்லை என்றும், ஆனால் சிறுமியை கொலை செய்ததில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை போலீஸார் சரிபார்த்து வருகின்றனர். மேலும், நான்கு பேரில் ஒவ்வொருவருக்கும் சம்பவத்தில் இருந்த தனிப்பட்ட பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கொலை, ஆதாரங்களை மறைத்தல் அல்லது குற்றவாளியை மறைப்பதற்காக தவறான தகவல் அளித்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பொதுவான நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் BNS சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளிலும், POCSO சட்டத்தின் பிரிவு 6-ன் கீழும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 வயது சிறுமி நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்