மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு சிறுமிகள் இணைந்து கல்லூரி மாணவி ஒருவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கோல்கவான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் புகாரில், நான்கு சிறுமிகளும் ஒரு ஆண் மாணவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி, அவரைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், நான்கு சிறுமிகள் ஒரு மாணவியைச் சூழ்ந்துகொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது. அவர்கள் மாணவியைத் திட்டி மிரட்டுவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மாணவியின் புகாரின்படி, சிறுமிகளில் ஒருவர் குச்சியால் அவரது காது மற்றும் கண் பகுதியில் தாக்கியதாகவும், மற்றவர்கள் அவரை உதைத்தும் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தை சிறுமிகளில் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து, பின்னர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்துள்ள தகவலின்படி, கல்லூரியில் அவருடன் படிக்கும் ஒரு ஆண் மாணவர் அவருக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவர் கண்டித்த நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மற்றும் மாணவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு மாணவி, அந்த ஆண் மாணவருடன் பழகுமாறு வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், (ஆக 06) - ஆம் தேதி ஒரு காரணத்தைக் கூறி தனது ஸ்கூட்டரில் அவரை அழைத்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி மாணவியை அழைத்துச் சென்ற நிலையில், பின்னர் நகர வனப்பகுதிக்கு அருகே உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாக புகார் தெரிவிக்கிறது. திட்டப்படி அங்கு ஏற்கெனவே மூன்று சிறுமிகள் காத்திருந்ததாகவும், நான்கு பேரும் முகத்தை மூடியபடி மாணவியைச் சூழ்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலின் போது, அந்த ஆண் மாணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள இணங்குமாறு மாணவியை மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட ஆண் மாணவருடன் வீடியோ அழைப்பில் பேச வைத்து மன்னிப்பு கேட்கும்படி மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அந்த ஆண் மாணவருடன் உறவில் இருக்க ஒப்புக்கொண்ட பின்னரே, செமரியா சதுக்கம் அருகே மாணவி விடுவிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு பயந்துபோன மாணவி, இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில், மாணவியைத் தாக்கும் வீடியோ உறவினர் ஒருவருக்கு கிடைத்ததாகவும், அது குறித்து மாணவியிடம் விசாரித்தபோது சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு 38 நாட்களுக்குப் பிறகு, (செப் 11) - ஆம் தேதி இந்த விவகாரம் கோல்கவான் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கோல்கவான் காவல் நிலையப் பொறுப்பாளர் சுதீப் சோனி, இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்க விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் தாக்குதல் வீடியோவையும் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மாணவி அளித்துள்ள புகார் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்