டெல்லியில் ஒரு தனியார் விமான நிறுவனத்தின் விமானி, ஒரு பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து, சாதாரணமாக லைட்டர் போல் தோற்றமளிக்கும் ஒரு ரகசிய கேமராவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம், விமானத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தது எப்படி?
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 31 வயதான மோஹித் பிரியதர்ஷி என்பவரே இந்த விவகாரத்தில் சிக்கிய பைலட். கடந்த ஆகஸ்ட் 30 அன்று, டெல்லியில் உள்ள கிஷன்நகர் கிராமத்தின் வாராந்திர சந்தையில், ஒரு பெண் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, மோஹித் தனது லைட்டர் போன்ற ரகசிய கேமராவைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை வீடியோ எடுத்துள்ளார்.
சந்தேகமடைந்த அந்தப் பெண், உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகள், ரகசியத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், காவல்துறையினர் மோஹித் பிரியதர்ஷியை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
விசாரணையின்போது, மோஹித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாகப் பணிபுரிகிறார். திருமணமாகாத இவர், தனது தனிப்பட்ட திருப்திக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.