ஜிது முண்டா என்ற அந்த நபர், கியோஞ்சர் மாவட்டத்தின் டயானாலி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது சகோதரி கக்ரா முண்டா, மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். கக்ரா இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது கணவரும் ஒரே குழந்தையும் முன்னரே இறந்துவிட்டதால், ஜிது மட்டுமே அவருக்கு எஞ்சியிருக்கும் ஒரே உறவினராக உள்ளார். ஜிது தன் சகோதரியின் கணக்கில் மீதமிருந்த ரூ.19,300-ஐ எடுக்க வங்கியை அணுகியுள்ளார். ஆனால், வங்கி மேலாளர் கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது சட்டப்பூர்வ வாரிசு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி மறுத்துள்ளார் .
"நான் பலமுறை வங்கிக்கு ஓடிச் சென்றேன், அங்குள்ளவர்கள், அவரது பெயரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுப்பதற்காக கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அவர் இறந்துவிட்டார் என்று நான் அவர்களிடம் கூறியபோதும், அவர்கள் என் பேச்சைக் கேட்காமல், அவரை வங்கிக்கு அழைத்து வருவதில் பிடிவாதமாக இருந்தனர். எனவே, விரக்தியின் உச்சத்தில், நான் கல்லறை தோண்டி, அவரது மரணத்திற்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டை வெளியே எடுத்தேன்," என்று முண்டா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கல்வியறிவற்ற பழங்குடியின மனிதரான ஜிதுவிடம் இறப்புச் சான்றிதழோ அல்லது வாரிசுரிமைப் பத்திரங்களோ இருக்கவில்லை. சிக்கலான அந்த நடைமுறையைப் புரிந்துகொள்ள முடியாமல், அவர் செய்வதறியாது இதுபோன்று செய்துள்ளார். திங்கட்கிழமை அன்று, ஜிது கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்று அங்கு தன் சகோதரியின் கல்லறையைத் தோண்டி எடுத்து, அந்த எலும்புக்கூட்டைத் துணியில் சுற்றிக்கொண்டு, சுட்டெரிக்கும் வெயிலில் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளர்.
ஜிது வங்கியை அடைந்ததும், அங்கு கண்ட காட்சி உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர்கள் "ஒரு ஏழை மனிதன் தன் சொந்தப் பணத்தைப் பெறுவது இவ்வளவு கடினமா?" என்று அவர்கள் கேட்டனர். இதில், உடனடியாக காவல்துறை தலையிட்டு, நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜிதுவை அமைதிப்படுத்தி பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மேலும், அவரது சகோதரியின் எலும்புக்கூடும் காவல்துறை கண்காணிப்பின் கீழ் அந்த மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.