santhosh with their family  
க்ரைம்

“என் மனைவி மகளை நான் தான் கொன்றேன்” - தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி.. தருமபுரி தொழிலதிபர் தற்கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையிலும், சாத்விகா ஹாலில் தலை சிதறி உயிரிழந்த நிலையிலும்...

Mahalakshmi Somasundaram

தர்மபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 45 வயதுடைய சந்தோஷ். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங்கிலும் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி 35 வயதுடைய சரண்யா. இவர்களது 14 வயது மகள் சாத்விகா, தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். சமீப காலமாக தொழிலில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சந்தோஷ் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு இடங்களில் வாங்கியிருந்த கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், அடமானம் வைத்திருந்த நகைகளையும் மீட்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று காலை சரண்யாவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அழைப்பை ஏற்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் பதில் கிடைக்காததால், அவர்கள் நேரில் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சரண்யா கழிவறையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையிலும், சாத்விகா ஹாலில் தலை சிதறி உயிரிழந்த நிலையிலும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், தர்மபுரி அருகே புறவடை பகுதியில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் சந்தோஷ் என்பது உறுதியானது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடன் சுமையால் கடும் மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ், தனது மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி மனைவியை நேற்று காலை வீட்டில் இருந்த மனைவியை கழிவறைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவரை அழைத்து வந்து வீட்டில் சுத்தியலால் தலையில் அடித்து அவரையும் கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து சந்தோஷ் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று நெடுஞ்சாலையில் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில், தற்கொலைக்கு முன்பு சந்தோஷ் சில வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்ததும் போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோக்களில் “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என் மனைவி மகளை நான் தான் கொன்றேன்.. கடன் சுமை அதிகரித்து விட்டதால் இவ்வாறு செய்கிறேன் எனது தாயையும் கொலை செய்ய நினைத்தேன் முடியவில்லை.. எனது மனைவியின் கணக்கில் 45 லட்சம் இருக்கிறது அதை எடுத்து கடன் அடைத்துவிடுங்கள்” என கூறி சிலர் பெயரை குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் மூன்று உயிர்கள் பலியான இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.