Dharmapuri School Teacher POCSO Case 
க்ரைம்

“மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கணித ஆசிரியர்” - பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை.. பல புகாரில் சிக்கியவர் போக்சோவில் கைது!

தங்கவேல் கடந்த 10 ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் கூறப்படும் கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் தங்கவேல். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளியில் பயிலும் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு தங்கவேல் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மேலும் மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாச அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவி இதுகுறித்து தனது நண்பர்களிடம் பகிர்ந்த நிலையில் இதனை அறிந்த அப்பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தங்கவேலை கண்டித்ததாக தெரிகிறது.

இருப்பினும் தங்கவேல் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது உறவினர்கள் உதவியுடன் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

Dharmapuri School Teacher POCSO Case protest

பின்னர், சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர் தங்கவேலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரது செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், ஆசிரியர் தங்கவேல் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற புகார்களில் சிக்கி, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்