

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளிக்கப்பட்ட புகாரில், அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் 18 வயது நிறைவடைந்த பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஊர் பஞ்சாயத்தில் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பரேலி மாவட்டம் ஷீஷ்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், 16 வயது சிறுமியை மிரட்டி அவரது ஆபாச புகைப்படங்களை எடுத்ததாகவும், அந்தப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
சுமார் ஒரு ஆண்டு காலமாக இந்த பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என்ற மிரட்டலுக்கு பயந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்று இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது, தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஷீஷ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பின்னர் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை காவல்துறையினர் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. அதில் சட்ட நடவடிக்கையை வேண்டாம் என்றும், இரு குடும்பத்தினரும் பேசி இந்த பிரச்சனையை முடித்து கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமிக்கு தற்போது 16 வயது என்பதால், அவருக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, பிழையால் வன்கொடுமை செய்த சிறுவனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என பஞ்சாயத்து முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இரு குடும்பத்தினரும் முன்னிலையில் ரோகா மற்றும் திலக் எனப்படும் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான சடங்குகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை பேசி முடித்துக்கொள்ள விரும்புவதாகவும், இருவரும் தற்போது சிறுவர்கள் என்பதால் திருமண வயதை அடைந்த பிறகு திருமணம் நடைபெறும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சமரச முடிவுக்கு வருவதற்கு முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக கிராமப் பெரியவர்கள் மூன்று நாட்கள் ஆலோசனை நடத்தியதாகவும் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் இரு குடும்பங்களும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும், மறுபுறம் காவல்துறையினர் வழக்கைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரேலி காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரேலி காவல்துறை அதிகாரி அருண் குமார் சிங்கும், இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சட்டப்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கிராமப் பஞ்சாயத்து தலையிட்டு சிறுமிக்கும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கும் திருமணம் செய்து வைக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் விருப்பம், அவரது பாதுகாப்பு மற்றும் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாயத்து மேற்கொண்டதாக கூறப்படும் சமரச பேச்சுவார்த்தை ஆகியவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையின் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்