dharmapuri pocso  
க்ரைம்

“உன்னை கடத்தி ரேப் பண்ணிடுவேன்” - 11 ஆம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்த திருமணமான வாலிபர்.. எலி மருந்து குடித்து சிறுமி விபரீதம்!

அச்சமடைந்த தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மகள், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி மேற்கொண்டு வந்ததால், தினமும் இரவு நேரத்தில் பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான சுதிராகவன் என்பவர், மாணவியை தினமும் பின்தொடர்ந்து ஆபாசமாக பேசியதுடன், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை மாணவி எச்சரித்து, சுதிராகவன் மாணவியை பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்திருக்கிறார். 

மேலும் தான் கூறும் இடத்திற்கு வரவில்லை என்றால் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதாக “உன்னை கடத்திட்டு போய் ரேப் பண்ணிடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, கடந்த ஜூலை 25ஆம் தேதி இரவு எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி முதலில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது, உடல்நிலை மோசமடையவே சுதிராகவன் தொடர்ந்து தன்னை மிரட்டி வந்ததாகவும் அதனால் அச்சமடைந்த தற்கொலைக்கு முயன்றதாகவும்  மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், ஜூலை 27ஆம் தேதி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் தந்தை அண்ணாமலை அளித்த புகாரின் அடிப்படையில் சுதிராகவன் மற்றும் அவரது தாய் ராதிகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாணவி தொடர்பான குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 நாட்களுக்கும் மேலாகியும் சுதிராகவன் கைது செய்யப்படவில்லை எனக் கூறி, மாணவியின் உறவினர்கள் மூக்கனூர் பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதிகோண்பாளையம் போலீசார், இரண்டு நாட்களுக்குள் சுதிராகவனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே, சுதிராகவன் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்