திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கறவை தொழில் செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பால் கறவைக்கு சென்ற ராமச்சந்திரனை அவரது மனைவி ஆர்த்தியின் தந்தை சந்திரன் வழிமறித்து வெட்டிக் கொன்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார் சந்திரனை கைது செய்தனர். இதற்கிடையே உயிரழந்த ராமச்சந்திரனின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக போலீசார் வைத்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி, தனது காதல் கணவனை தனது தந்தை மற்றும் சகோதரர்கள் சேர்ந்து தான் கொலை செய்தார்கள் என புகார் தெரிவித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை முதல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை ஆர்த்திக்கு தெரியாமல் அவரது இறந்த கணவரின் உடலை கணவரின் பெற்றோர் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்வதற்கு நிலக்கோட்டைக்கு கொண்டு சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி ஆர்த்தி தனது கணவனின் உடலை எனக்குத் தெரியாமல் எப்படி கொண்டு சென்றீர்கள் என வாக்குவாதம் செய்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மீண்டும் அமர்ந்து போராட்டம் செய்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அவரை சமரசம் செய்ததனை அடுத்து பெண் தனது போராட்டத்தை கைவிட்டார்.
இந்நிலையில் ராமசந்திரன் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு பெண்ணின் அண்ணனான ரிவின் என்பவர் ராமச்சந்திரனை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அனுப்பிய ஆடியோ வெளியாகி உள்ளது அதில் “நீ நரக வேதனையை அனுபவிப்ப, என் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு போன உன்ன அப்படியே விட்ட நான் பொட்ட, உன்னை துண்டு துண்டு அறுத்து கண்ணை நொண்டி நரம்பை இழுத்து பயங்கரமா கொலை பண்ணுவேன்” என கொடூரத்தின் உச்சத்தில் பேசியிருக்கிறார். எனவே ஆர்த்தி தனது தந்தை மட்டுமல்லாமல் அண்ணன், அம்மா என குடும்பமே சேர்ந்து தான் கொலை செய்துள்ளது எனவே அனைவரையும் கைது செய்ய வேண்டும் என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.