Dindigul Wife Murder Case 
க்ரைம்

“சேலை துண்டுடன் மீட்கப்பட்ட பெண் எலும்புக்கூடு” - மனைவியை கொன்று புதைத்த கணவன்.. ஒரு மாதம் கேசுவலாக இருந்தது எப்படி?

திண்டுக்கல் குட்டத்துப்பட்டியில் வசிக்கும் கவுசல்யாவின் பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர்...

Mahalakshmi Somasundaram

திண்டுக்கல் அருகே மனைவி மாயமானதாகக் கூறி வந்த கணவர், அவரைக் கொலை செய்து உடலைப் புதைத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பல நாட்களாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தேடுதலின்போது பெண்ணின் கை எலும்பு மற்றும் சேலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லைப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய லாரன்ஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு 32 வயதுடைய கவுசல்யா என்ற மனைவியும், 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கவுசல்யா திடீரென மாயமானார். இதற்கிடையே, திண்டுக்கல் குட்டத்துப்பட்டியில் வசிக்கும் கவுசல்யாவின் பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது கவுசல்யா வீட்டில் இல்லாததைக் கண்டு, இதுகுறித்து லாரன்ஸிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யாவின் பெற்றோர், கடந்த (அக் 28)-ஆம் தேதி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், மாயமான தங்களது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து போலீசார் லாரன்ஸை அழைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையின்போது, கவுசல்யாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக லாரன்ஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், கல்நூத்தாம்பட்டி அருகே அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, ரிங் ரோடு பணிக்காகக் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் குழி தோண்டிப் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்குச் சென்றனர். அங்கு கவுசல்யாவின் உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டித் தேடும் பணி தொடங்கியது.

தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணியில், சுமார் 30 அடி ஆழம் வரை தோண்டப்பட்டது. அப்போது கவுசல்யாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இடத்தில் கை எலும்பு மற்றும் சேலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அவற்றைப் போலீசார் கைப்பற்றி விசாரணையைத் தொடர்ந்தனர். இதையடுத்து, திண்டுக்கல் கோட்டாட்சியர் பழனிவேல், கிழக்கு வட்டாட்சியர் பானுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத், அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரதாப் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கண்டெடுக்கப்பட்ட கை எலும்பு மற்றும் சேலையை டி.என்.ஏ. பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையே, கவுசல்யா மாயமானது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய திண்டுக்கல் தாலுகா போலீசார், லாரன்ஸைக் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட எலும்புத் துண்டுகள் மற்றும் சேலை தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் கிடைத்த பிறகே அவை கவுசல்யாவுடையதா என்பது உறுதியாகும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்