sameer and ramesh  
க்ரைம்

“எங்க தலைவரை தப்பா பேசுவியா” - மாறி மாறி அடித்துக் கொண்ட திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள்.. சமாதானப்படுத்த சென்றவர் மீது தாக்குதல்!

இதனால் சமீருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்தது...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி 152 வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சமீர். இவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீர் கடந்த (நவ 16) ஆம் தேதி அன்று தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இவருடன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 20க்கும் மேற்பட்டோர் இவரை போலவே திமுகவில் இணைந்துள்ளனர். அப்போது தவெக-வின் உறுப்பினர் படிவம் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கிழித்து, படிவங்களை எரித்தும் திமுக எம்எல்ஏ கணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் இவற்றை காணொளியாக பதிவு செய்து அவர்களது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இவர் திமுகவில் இணைவதற்கு முன்னதாகவே திமுக எம்எல்ஏ கணபதிக்கு ஆதரவாக பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை ஒட்டி இருந்தார். இந்த நிலையில் திமுகவில் இணையும் போது படிவங்களை கிழித்து எரித்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவர் திமுக நிர்வாகி எனவும் தவெக வை பற்றி தவறாக அவதூறு பரப்புவதாகவும் கூறி அவரது ஒரு சில வீடியோக்களை சிலர் வெளியிட்டு இருந்தனர்.

இதனால் சமீருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்தது இந்த நிலையில் இன்று சமீர் மீண்டும் தவெக குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் சிலர் சமீரின் வீட்டின் அருகே சென்று “எங்க தலைவர் பத்தியே தப்பா பேசுவியா” பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டு சாலையில் படுத்து உருண்டு சண்டையிட்டதாக சொல்லபடுகிறது.

இதனை கண்ட சமீர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான 51 வயதுடைய ரமேஷ் என்பவர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தடுக்க முயன்ற போது யாரோ ஒருவர் அவரின் மூக்கில் தாக்கியதில் அவர் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்த ரமேஷ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.