

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய அப்துல் வாஹித். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து சவாரி ஓட்டி வந்துள்ளார். காலை மற்றும் மாலையில் பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல் நேற்று அப்துல் வாஹித் ஆட்டோவில் பள்ளி மாணவி ஒருவரை சவாரியாக ஏற்றிக் கொண்டு கீழ்ப்பாக்கம் மேடவாக்கம் டேங்க் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே இருந்த பனைமரம் தானாக ஆட்டோவின் முன்பகுதி மேல் விழுந்துள்ளது.
இதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்து ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பின்னால் அமர்ந்து இருந்த மாணவியை மீட்டனர். மேலும் இது குறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து தலைமைச் செயலக காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சரிந்து விழுந்த பனை மரத்தை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தி விட்டனர்.
போலீசார் விசாரணையில், ஆட்டோ ஓட்டுனர் அப்துல் வாஹித் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவியை நுங்கம்பாக்கத்தில் சவாரி ஏற்றி அயனாவரத்திற்கு அழைத்து செல்லும் போது தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் பின்னால் அமர்ந்திருந்த மாணவி எந்த காயமும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பனை மரம் திடீரென எப்படி விழுந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவியை சவாரி ஏற்றி வந்த ஆட்டோ மீது பனை மரம் விழுந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பனை மரம் மற்றும் சேதமடைந்த ஆட்டோவை அப்புறப்படுத்தும் வரையில் கீழ்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.