செய்யாறு அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணை அடித்து தூக்கிலிட்ட கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்ததால் பரபரப்பு
செய்யாறு அருகே திருமணமான நான்கே மாதத்தில் புதுப்பெண்ணை அடித்து தூக்கிலிட்ட கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி புதுப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா புத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன்(45), இவர் கூலி வேலை செய்துவந்துள்ளார். இவரது மனைவி அமிர்தலட்சுமி (38). இவர் செய்யாறு சிப்காட் சூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கங்கா என்பவருக்கும் நட்புறவு ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வேறு சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் கங்கா அமிர்தலட்சுமியின் மகளை வேண்டி கேட்டுக் கொண்டதன் பேரில் நர்சிங் படித்து கொண்டிருந்த அவரின் மூத்த மகள் ஜீவலட்சுமியை (18) கடந்த 01.02.2026 என்று இரு வீட்டார் சம்பந்தத்துடன் கங்காவின் மகனுக்கு திருமணம் செய்துவைத்தனர். கங்காவின் மகன் ஜீவானந்தம் செய்யாறு சிப்காட் சோழவத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (23.05.2026) பிற்பகல் 12.30 மணி அளவில் கங்கா அமிர்தலட்சுமிக்கு போன்செய்து ஜீவலட்சுமி நெஞ்சு வலியால் இறந்து விட்டதாக கூறி உடனடியாக செல்போனை துண்டித்துள்ளார். தகவலறிந்து வந்த ஜீவலட்சுமியின் வீட்டார், அவரின் கழுத்தில் தூக்கு மாட்டிய தடயமும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் விசாரித்தபோது மகளை அடித்து துன்புறுத்தி தூக்கிலிட்டுள்ளனனர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தூசி போலீசில் அமிர்த லட்சுமி அன்றிரவு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மகளிடம் வரதட்சணை கேட்டும், வீட்டை எழுதி வாங்கி வா எனக்கூறி சித்தரவதை செய்ததாகவும், சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களின் மகள் இறப்புக்கு காரணமான மருமகன் ஜீவானந்தம், தம்பி தனுஷ் இவர்களது தாயார் கங்கா, அவரது சகோதரியும் அவரின் கணவர் உட்பட 5 பேரும் மகளை அடித்து துன்புறுத்தி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இறந்த ஜீவலட்சுமியின் சடலத்தை தூசி போலீசார் மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள ஜீவ லட்சுமி சடலத்தை பார்வையிட்டு விசாரணை செய்ய வந்த செய்யாறு சப் கலெக்டர் அம்பிகா ஜெயின் வந்தபோது ஜீவலட்சுமியின் உறவினர்கள் மகளை தூக்கிலிட்ட கணவர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஜீப்பை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி மீனாட்சிநாதன், இன்ஸ்பெக்டர்கள் (செய்யாறு) நரசிம்மஜோதி, (தூசி) கோபால் மற்றும் போலீசார் மறியலில் முயற்சித்த ஜீவலட்சுமியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், போலீசாருக்கும் இறந்த பெண்ணின் உறவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜீவலட்சிமியின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தல் பேரில் மறியல் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.