கரூர் மாவட்டம், தாந்தோனி அடுத்த ஜெகதாபி தெற்கு காலனி சேர்ந்தவர் நிவேதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த நன்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. முருகேசன் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நிலையில் நிவேதா மற்றும் குழந்தையை நன்றாக பார்த்து கொண்டு வந்திருக்கிறார். பின்னர் நாளடைவில் நிவேதாவிற்கு முருகேசன் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. முருகேசன் நிவேதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அவரை சட்டபூர்வமாக பிரியாமல் தன்னை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் முருகேசன் அவரது முதல் மனைவியுடன் பேசி வந்ததாக கூறப்படும் நிலையில் இதனால் ஆத்திரமடைந்த நிவேதா இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். எனவே கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் மீண்டும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிவேதா முருகேசனை பிரிந்த தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் முருகேசன் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை அறிந்த நிவேதா வாழ்க்கையில் வெறுப்படைந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது ப்ளாஸ்க்கில் பெட்ரோலை நிரப்பி அதனை மறைத்து வைத்திருந்த நிவேதா மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் தன் கை குழந்தையின் மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து முருகேசன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதை அறிந்த மனைவி ஒன்றரை வயது குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.