க்ரைம்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்! பலமுறை நடந்த பலாத்காரம்.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதான....

Muthu Lakshmi

தேனி மாவட்டம் போடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமி ஒருவர், மூன்றாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு, சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதான செல்வம் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிப் பழகி வந்துள்ளார்.

புகார் அளிக்கப்படுவதற்கு சுமார் ஓராண்டுக்கு முன்பிலிருந்தே (சிறுமிக்கு 15 வயது இருந்தபோது), வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில் சிறுமியை வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், போடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்வத்தைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ். எழில் அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், முதியவர் செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சாகும் வரை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளி செல்வத்தை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.