ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதுடைய வெங்கடேஷ் பிரசாந்த். இவரது மனைவி யுவராணி. இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று(செப் 20) முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, யுவராணி வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை வெங்கடேஷ் பிரசாந்த் தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இரவு யுவராணியும் அவரது மகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது, வெங்கடேஷ் பிரசாந்த் மற்றொரு அறையில் தூக்கிட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வெங்கடேஷ் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேஷ் பிரசாந்தின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அந்தியூர் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேஷ் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தால் கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அப்படி இருந்தால் கொலை செய்தது யார். என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, முதற்கட்ட விசாரணையில் யுவராணி கடந்த சில நாட்களாக பருவாச்சி, அம்மன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் என்ற இளைஞருடன் தொலைபேசியில் பேசி வந்தது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த வெங்கடேஷ் பிரசாந்த் அவரது மனைவி யுவராணியை கண்டித்த நிலையில் இது தொடர்பாகவே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் வெங்கடேஷ் பிரசாந்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மனைவியை காப்பாற்றிவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.