ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் 26 வயதுடைய கோபிநாத். இவர் ஈரோடு மணல்மேடு பகுதியில் தனது மனைவி மஞ்சு மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தேங்காய் வியாபாரியான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு ரீதியாக பழகி வந்திருக்கிறார். எனவே கோபிநாத் அடிக்கடி விவேக் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
நாளடைவில் இந்த விவகாரம் குறித்து அறிந்த விவேக் கோபிநாத்தை நேரில் சந்தித்து இனிமேல் தனது மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் கோபிநாத் தொடர்ந்து விவேக்கின் மனைவியுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த (ஜூன் 29) ஆம் தேதி கோபிநாத் ஈரோடு அருகே சோலார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். இதை அறிந்த விவேக், தனது நண்பர்களான 39 வயதுடைய சரவணன் மற்றும் 39 வயதுடைய சதீஷிடம் தகவல் தெரிவித்து, கோபிநாத்தை கண்டிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து டாஸ்மாக் பாருக்கு சென்ற சரவணன் மற்றும் சதீஷ், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கோபிநாத்திடம், "விவேக்கின் மனைவியுடன் ஏன் தொடர்ந்து பேசுகிறாய்?" என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபிநாத்தை டாஸ்மாக் கடை அருகே இருந்த காலி இடத்திற்கு அழைத்துச் சென்று இருவரும் சரமாரியாக தாக்கி, அங்கு கிடந்த கல்லை எடுத்து கோபிநாத்தின் தலை மற்றும் முகத்தில் பலமுறை தாக்கியுள்ளனர். கோபிநாத் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நிலையில், அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்த சரவணன் மற்றும் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த கோபிநாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தாக்குதலுக்கு காரணமானதாக கூறப்படும் விவேக் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட அவரது நண்பர்களான சரவணன், சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கோபிநாத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த விவேக், சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய மூவர் மீதும் போலீசார் கூடுதலாக கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் கோபிநாத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்த கூலித்தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.