online trade family in tragedy  
க்ரைம்

“என்னை காப்பாத்தாதீங்க.. குடும்பத்தோடு சேர்ந்துதான் சாகப்போனோம்” -ஆன்லைன் வர்த்தகத்தால் சிதையும் குடும்பங்கள்!!!

நவீன் எழுதிய தற்கொலை கடித்ததையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தான் பணத்தை....

மாலை முரசு செய்தி குழு

சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த மத்திய அரசு அதிகாரியான நவீன் கண்ணன் அவரது மனைவி நிவேதிதாவின் கழுத்தை அறுத்து விட்டு மகன் லிவினையும் கழுத்தை  நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணா நகர், 18வது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன், 38. இவர், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்காளர் அலுவலகத்தில், சீனியர் ஆடிட்டராக பணிபுரிந்தார். 

இவரது மனைவி நிவேதிதா, பெரம்பூர் தெற்கு ரயில்வே 'லோகோ' அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர்கள் இருவரின் ஒரே மகன் லிவின்(7). இவர்களுடன், நவீன் கண்ணனின் வயதான தந்தை மற்றும் தாயும்  தங்கியிருந்தனர். 

மத்திய அரசு அதிகாரியான நவீன் கண்ணன் மீது கையூட்டு புகார்கள் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் ‘ஆன்லைன் வர்த்தகத்தில்’ ஈடுபட்டு பெருத்த நஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துவந்துள்ளார். 

 நேற்று காலை தாய் புவனேஸ்வரியிடம் “நான் வெளியில் செல்கிறேன்” என பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். சில மணி நேரத்திற்கு பின், புது நம்பரில் தாயை தொடர்பு கொண்டவர், மனைவியையும், மகனையும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்கள் துாங்குகின்றனர்” என கூறியுள்ளார்.

அனால் நீண்ட நேரம் ஆகியும் மருமகள் கதவை திறக்காததால், சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, “நிவேதிதா கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடியும், லிவின்பேச்சு மூச்சுமின்றியும் கிடந்துள்ளார்”

இதனை பார்த்து அதிர்ந்த புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, தரைத்தளத்தில் இருந்த தனியார் அங்காடி ஊழியர்கள் ஓடி வந்து, நிவேதா மற்றும் சிறுவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிவேதிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், நிவேதாவிடம் விசாரணை மேற்கொண்டு, நவீன் கண்ணனை தேடினர். இதற்கிடையில், பகல் 11:00 மணியளவில், வில்லிவாக்கம் -கொரட்டூர் இடையே, 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' ரயில் முன் பாய்ந்து, நவீன் கண்ணன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. நிவேதிதா அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் நிவேதிதாவை மீட்டபோது “என்னை காப்பாத்தாதீங்க… என் கணவர் நல்லவர். மூணு பெரும் சேர்ந்துதான் சாக முடிவு பண்ணோம்” என கதறியுள்ளார்.  விசாரணையில், நவீன்,  நிவேதிதாவை கழுத்தை அறுக்கும் போது தலையணை போன்றவற்றில் கத்தி பட்டு தலையனை முழுவதும் அறுக்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

நவீன் எழுதிய தற்கொலை கடித்ததையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தான் பணத்தை இழந்தது குறித்தும்,  மேலும் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு அதில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுக்க ஆன்லைன் வர்த்தகத்தால் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதுகுறித்த ஏராளமான செய்திகளையும் நாம பார்க்கிறோம். இது எதோ அறியாமையில் நிகழ்வது என சொல்லிவிட முடியாது. நன்கு படித்தவர்கள்தான்  இதுபோன்ற ஆன்லைன் வர்த்தகங்களில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த பிரச்சனை பெரியவர்களோடு நின்றுவிடுவதில்லை. லிவிங் போல எத்தனையோ குழந்தைகள் இதற்கு பலியாகின்றன. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தபோதும், மக்களிடையே இதுகுறித்த முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்றே சொல்லவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.