ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மூன்று மகள்களை செங்கலால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவர் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் கோவிந்தபுரம் என்ற பகுதியில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 40 வயதான கீதாஜா மற்றும் அவரது மூன்று மகள்களான நந்தினி, கிரிஷா மற்றும் ராதிகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்று மகள்களும் 17 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட கீதாஜாவின் கணவர் ராகுல்ஜா என்பவர்தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களை பதுங்கிச் சென்று செங்கலால் தலையில் பலமுறை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் மனைவி மற்றும் 3 மகள்கள் என நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு ராகுல் ஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில், வீட்டில் நீண்ட நேரமாக எந்தவிதமான நடமாட்டமும் இல்லாததால் அக்கம்பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ராகுலின் 85 வயதான தந்தையும் வீட்டில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தடய அறிவியல் ஆய்வகக் குழுவினரும், மோப்ப நாய் படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கொலை நடந்த இடத்தில் இருந்து ரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செங்கலும் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகளுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும், குடும்பத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மேற்குப் பகுதி காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் கிரண் கூறுகையில், ராகுல் ஜா இந்தத் தாக்குதலை நடத்தியதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ள ராகுல்ஜாவை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர் தப்பிச் செல்லக்கூடிய இடங்கள் மற்றும் பதுங்கியிருக்க வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.